

பல்கலைக்கழக, கல்லூரி நிர்வாகங்கள், தங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அண்மையில் உத்தரவிட்டுள்ளது. வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுள்ள இந்த நடவடிக்கையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கான ஐந்தாவது தேசிய மாநாடு 2025 டிசம்பரில் நடைபெற்றது. அதில் குழந்தை நலன் தொடக்கநிலைப் பராமரிப்பு, உயர் கல்வி, திறன் பயிற்சி போன்றவற்றில் உள்ள நீண்ட கால சவால்கள் குறித்து விவரிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகத்தான், பல்கலைக்கழக மானியக் குழுச் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர் கல்வி நிறுவனங்களுக்கான புதிய பொறுப்பு குறித்து தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அருகில் அமைந்துள்ள ஐந்து அல்லது ஆறு அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்து, அங்குள்ள குழந்தைகளின் தொடக்கக் கல்விச் செயல்பாடுகளில் உதவுவது, சுகாதாரச் செயல்பாடுகளில் துணைநிற்பது போன்ற பணிகளில் தம் மாணவர்களை ஈடுபட வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.