

கைப்பேசியில் குரல் அழைப்பு, குறுந்தகவல் சேவைகளை மட்டுமே கொண்ட ரீசார்ஜ், 30 நாள்கள் காலக்கெடு முதலான திட்டங்களைத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கூடுதலாக அளிப்பதை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கட்டாயமாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கைப்பேசிச் சேவைத் திட்டங்களில் மாற்றங்கள் அவசியம் என மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டா நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார்.
28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் கெடு உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஓராண்டில் 12 மாதங்கள் இருக்கும்போது வாடிக்கையாளர் ஏன் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது என்னும் கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும், 30 நாள்கள் செல்லுபடிக் காலம், மொபைல் டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கான குரல் - குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் வழங்கும் திட்டங்களையும் இதேபோல் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை ஏற்றுப் புதிய விதிகளை செப்டம்பர் 22இல் டிராய் அறிவித்தது. ‘தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13ஆவது திருத்த) ஒழுங்குமுறைகள் 2026இன்படி இணைய வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்குக் குரல், எஸ்எம்எஸ் மட்டும் உள்ள பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களைத் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். இவற்றுடன் டேட்டா அடங்கிய கட்டணத் திட்டங்களைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் இந்தக் குறைந்தபட்ச சேவை வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டங்கள் வெவ்வேறு காலக்கெடுவுடன், அதாவது 28 நாள்கள், 30 நாள்கள், 56 நாள்கள், 84 நாள்கள் எனப் பயன்படுத்துவதற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்’ என்று டிராய் கூறியுள்ளது.