

தமிழ்நாட்டின் மொத்த உயர் கல்விச் சேர்க்கை விகிதம் (50%) தேசிய சராசரியைவிட (28.4%) அதிகமாக இருக்கும் நிலையில், ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் இந்தத் திட்டத்தால், எட்டு லட்சம் மாணவியர் பயனடைந்துவருகின்றனர் என்பது பெண்களுக்கான கல்வியில் தமிழ்நாடு எட்டியிருக்கும் மற்றுமொரு மைல்கல்.
பெண்கள் எவ்விதத் தடையுமின்றிக் கல்வி பயிலும் சூழல் நிலவுவதைவிட, ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. பெண் கல்விக்கு அரசு முழு ஆதரவு நல்கும்போது நாட்டின் வளர்ச்சி உறுதிபெறுகிறது. இந்தியாவில், பல்வேறு வகைகளில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, பெண் கல்வியிலும் பல்வேறு திட்டங்களை வழங்கிவருகிறது.