

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது.
இந்த ஆலையில், ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்து விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பணி முடிந்த பின்னர் ஆலை வளாகத்திலேயே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்தான் இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வார நாள்களில் விபத்து நிகழ்ந்திருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்திருக்கக்கூடும்.