

உலக உடல்பருமன் வரைபடம் 2026இன்படி இந்தியாவில் 5 – 19 வயதுக்கு உட்பட்டவர்களில் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் 4.1 கோடி பேர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது.
2030இல் உலக அளவிலான உடல் பருமன் கொண்டவர்களில் இந்தியக் குழந்தைகள் 11 சதவீதம் அங்கம் வகிப்பார்கள் என்பது நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் நொறுவைகளையும் அதிகம் உண்பது, மிகைக் கொழுப்பு-சர்க்கரை-உப்பு நிறைந்த உணவைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவது உள்ளிட்ட முறையற்ற உணவுப் பழக்கங்களால் உடல் பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இந்தியக் குழந்தைகளிடையே அதிகரித்துவருகின்றன.
குழந்தைகள் - வளரிளம் பருவத்தினர் மத்தியில் அதிகரித்துவரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், அதன்கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் (என்ஐஎன்) புதிய உணவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளன.