

புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவர் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கருத்து தெரிவித்திருப்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு ஏப்ரல் 7 அன்று, மருதம்புத்தூரைச் சேர்ந்த மணிகண்டனுக்குச் சொந்தமான பனைமரங்களிலிருந்து கள் இறக்கப்படுகிறதா எனச் சோதனையில் ஈடுபட்டது.
பனைமரங்களில் ஏறி, அதில் கட்டப்பட்ட பானைகளைக் காட்டும்படி மணிகண்டன் பணிக்கப்பட்டதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா மணிகண்டனைக் கால்களில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்துக் காவல் துறை வழக்குப் பதிவு செய்ததையடுத்து மணிகண்டன் தரப்பு, ‘உள்ளூர்க் காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. சிபிஐ அல்லது வேறு அமைப்பு விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தது.