

உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பேசுபொருளாகியிருக்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களிலும் மூன்று மொழிகள் கற்பிப்பதை ஒரு வழிகாட்டுதலாகக் கொண்டுள்ளது.
மாணவர்கள் அவரவர் உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு, அரசமைப்புச் சட்டம் பட்டியலிடும் 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றையும் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் கொள்கை கூறுகிறது. பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தமிழக அரசு மறுத்ததும் பி.எம். திட்டத்தில் சேராத தமிழகத்துக்கு ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான ரூ.2,500 கோடி நிதியை வழங்க முடியாது என மத்திய அரசு மறுத்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.