

புத்தாக்க (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களின் சேவை தவிர்க்க முடியாததாகிவிட்ட இன்றைய சூழலில், கடந்த ஆண்டு 9500 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. புத்தாக்கத் தொழிலுக்கு உகந்த களமாக விளங்கும் இந்தியாவில், இத்தகைய இழப்புகள் நீடிக்கக் கூடாது.
புத்தாக்க நிறுவனங்கள் ஒரு புதுமையான கண்டுபிடிப்பை நவீனத் தகவல் தொழில்நுட்பத்தின் துணையோடு பொருளாகவோ, சேவையாகவோ முன்வைக்கின்றன. ‘அமேசான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘ஊபர்’, ‘ஃபிளிப்கார்ட்’ போன்றவை புத்தாக்க நிறுவனங்களாகத் தொடங்கப்பட்டவைதான்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் 21 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
ஆண்டுதோறும் புதிதாகத் தொடங்கப்படுகிற, லாபகரமாக இயங்குகிற புத்தாக்க நிறுவனங்கள்போலவே மீள முடியாத அளவுக்கு நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிறுவனங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு 9,500 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக ‘இன்க்42’ இணையத்தளத்தின் அண்மைக் கணக்கெடுப்பு கூறுகிறது. 2024 உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவுதான் எனினும் இதன் பின்னணி ஆய்வுக்கு உரியது.