

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கவிருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாகத் தேர்ந்தெடுக்கப்படப் புதிய வாய்ப்பு உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு 1992இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதில் ஒருமித்த கருத்தை எட்ட மேலும் மூன்று தசாப்தங்கள் தேவைப்பட்டது.
2023 செப்டம்பரில் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. மக்கள்தொகையின் அடிப்படையில் மாநில வாரியாகத் தொகுதி மறுவரையறை செய்வதன் வழியாக இது நடைமுறைப்படுத்தப்படும்.
2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 543 ஆக இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்க, அரசமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.