

கடந்த ஒரு வாரமாக, இண்டிகோ நிறுவனம் விமானப் பயணங்களை முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் விமானப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்தப் பிரச்சினைக்கு உடனடியான, அதேவேளையில் நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
இந்தியாவில் 2006இல் தொடங்கப்பட்ட இண்டிகோ நிறுவனம், அதிக விமானங்களைக் கொண்ட கட்டமைப்பு, குறைந்த கட்டணம் ஆகியவற்றின் மூலம் பயணிகளின் பேராதரவைப் பெற்றது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து பெரும்பாலும் இண்டிகோவையே சார்ந்துள்ளது.
இந்நிலையில், இண்டிகோ விமானங்கள் டெல்லி, சென்னை உள்படப் பல நகரங்களில் டிசம்பர் 2லிருந்து எந்த முன்னறிவிப்பும் இன்றி சேவையை நிறுத்தின. இதனால், உள்நாட்டுப் பயணங்களுடன், வெளிநாட்டுப் பயணங்களும் தடைபட்டன. இந்த நெருக்கடியைப் பிற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தின.