

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் செவிலியர்களின் குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டிய தருணம் இது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களாக 4,848 செவிலியர்கள் 2021இல் பணி அமர்த்தப்பட்டனர். கரோனா பெருந்தொற்றின்போது உயிரைப் பணயம் வைத்து மருத்துவச் சேவையில் ஈடுபட்ட இவர்கள், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைத் தற்போதுவரை பூர்த்திசெய்து வருகின்றனர்.
தேசியச் சுகாதார இயக்கத்தின்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள துணைச் சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களில் தொற்றுநோய்ப் பரிசோதனை, கர்ப்பிணிகளுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை முதலான முக்கியப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.21,000 மட்டுமே மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதியத்தை ரூ.45,000ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மருத்துவப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர்கள் அக்டோபர் 5இல் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாள் முழுவதும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துக் கோஷமிட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பிலிருந்து யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. பிறகு, பேச்சுவார்த்தை நடத்தச் செவிலியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அரசுத் தரப்பு அழைப்புவிடுத்திருப்பதாகக் கூறி, போராட்டக்காரர்கள் சிலரைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.