

“மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்” என்று பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பதும், அணையால் மூழ்கும் வாய்ப்புள்ள காட்டுப்பகுதி குறித்த ஆய்வை அம்மாநில அரசு துரிதப்படுத்துவதும், இப்பிரச்சினையின் தீவிரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழகக் கட்சிகளின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. கர்நாடகத்தின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்டும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே அம்மாநில அரசு முனைப்புகாட்டி வருகிறது.
‘காவிரியில் பெருகி வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிப்பதற்காகக் கட்டப்பட உள்ள மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கர்நாடகம் கூறுகிறது. ஆனால், ‘அவ்வாறு அணை கட்டினால் காவிரி கீழ்ப்படுகையான தமிழகத்தில் டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசியும்’ என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 7 அன்று பிரதமர் மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எழுதிய கடிதத்தில் ‘மேகேதாட்டு தொடர்பான சட்டபூர்வ, நிர்வாக அனுமதியை மத்திய அமைச்சகங்கள் வழங்கக் கூடாது; காவிரிப் படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்தைத் தொடர வேண்டாம் எனக் கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தார்.