

குறிப்பிட்ட பழங்குடிப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அங்குள்ள கிராம சபைகளின் ஒப்புதல் அவசியம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ஒடிஷாவில், சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஏறக்குறைய 873 ஹெக்டேர் நிலம் மாநில அரசால் டால்மியா சிமெண்ட்ஸ் பாரத் லிமிடெட் நிறுவனத்துக்குச் சுண்ணாம்புக்கல் சுரங்கப் பணிகளுக்காக நீண்ட காலத்துக்கு முன்பே குத்தகைக்கு வழங்கப்பட்டது.
கடைசியாக 2016லிருந்து 2040 வரைக்கும் குத்தகை நீட்டிக்கப்பட்டது. ஏறக்குறைய 335 ஹெக்டேர் பரப்பில் சுரங்கப் பணிகளை மேற்கொண்டுவந்த இந்த நிறுவனம், மீதமுள்ள பகுதியிலும் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்தது.
சுரங்கம் தோண்ட அனுமதி பெற்றிருப்பினும், அதைச் செயல்படுத்த மேற்பரப்பைப் பயன்படுத்தும் உரிமை தனியே பெறப்பட வேண்டும். அதற்காக நிலத்தைக் கையகப்படுத்தித் தரும்படி 2015இல் இந்த நிறுவனம் மாநில அரசிடம் கோரியது.