

விளாத்திகுளம் குளத்தூர் அருகே வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கோவை சூலூரில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு சற்றே ஆறுதல் அளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி மார்ச் 10 அன்று மாலை உடல் உபாதையைக் கழிப்பதற்காகப் புதர்க் காட்டுப் பகுதிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. உடலில் காயங்களுடன் அம்மாணவி சடலமாகக் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை, தேடுதல் வேட்டை என ஒரு வார காலத் தீவிர முயற்சிக்குப் பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.