

அதிகரித்துவரும் வெப்பத்தின் தாக்கத்தைப் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மூலம் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், ‘தமிழ்நாடு மாநில வெப்பச் செயல்திட்டம் 2026’ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
உலக அளவில் காலநிலை மாற்றத்தால் விளையும் ஆபத்துகள் அதிகரித்துவருகின்றன. இதில் வெப்ப அலை காரணமாக இந்தியாவில் மட்டும் கடந்த 1990 - 2015 காலக்கட்டத்தில் 25 ஆயிரம் வெப்பம் சார்ந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 2024 கோடைக்காலத்தில் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதால் 23 மாநிலங்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும். இம்மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைச் சில நாள்களே தாண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும் நாள்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.