

தனியார் பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்குமாறு மாணவர்களைச் சில பள்ளிகள் நிர்ப்பந்திப்பது குறித்துப் பதிலளிக்குமாறு மத்தியக் கல்வி அமைச்சகம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மாநில / ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இது தனியார் பள்ளிகளின் கல்வி சார்ந்த அணுகுமுறை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைப் பின்பற்றிச் செயல்பட்டுவரும் சில தனியார் பள்ளிகளில், தேசியக் கல்வி ஆராய்ச்சி - பயிற்சி கவுன்சில் (NCERT) தயாரித்து வெளியிடும் புத்தகங்களுக்குப் பதிலாகத் தனியார் பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக, ஏப்ரல் 9 அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஆணையம் கேள்வி எழுப்பியது. கூடவே, தேசியப் பள்ளிப் பை கொள்கை 2020-ஐ உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
என்சிஇஆர்டி புத்தகங்கள் குறைந்த விலையில் வழங்கப்படும் நிலையில், தனியார் பதிப்பகங்களின் புத்தகங்கள் அதிக விலையிலேயே சந்தைக்கு வருகின்றன.