

மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
துல்லியமான கணக்கீட்டுக்கு இது வழிவகுக்கும் என்று காரணம் கூறப்பட்டாலும், இதன்மூலமாக நிரந்தர வேலைவாய்ப்பு பறிபோவதோடு முறைகேடுகளும் தவறுகளும் நிகழ சாத்தியம் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் கணக்கீட்டாளர்களைத் தனியார் நிறுவனங்கள் மூலம் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அக்டோபர் முதல் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அண்மையில் அறிவித்தது.
துல்லியமான கணக்கீடு தொடர்பான புகார்களில் நுகர்வோருக்குத் தீர்வு வழங்கவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் உதவுகிற தற்காலிக நடவடிக்கையே இது என்றும் கூறப்பட்டது. ஆனால், இது தனியார்மயமாக்கலுக்கும் மின் கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.