

பெருகிவரும் சைபர் குற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றை எதிர்கொள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏஐ பயிற்சி கட்டாயமாக்கப்பட்டிருப்பது காலத்தின் தேவை கருதி எடுக்கப்பட்டிருக்கும் முக்கிய முடிவு.
இந்தியாவில் 86%க்கும் அதிகமான குடும்பங்கள் இன்று இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 109.27 கோடி இணையப் பயனர்கள் உள்ளனர். கூடவே, சைபர் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தேசிய இணையவழிக் குற்றப் புகார் தளத்தில் (National Cyber Crime Reporting Portal) 2019-2026க்கு இடைப்பட்ட காலத்தில் 98 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன. கடந்த 2025இல் மட்டும் 28.15 லட்சம் சைபர் குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இணையவழிக் குற்றங்களில் 75% நிதி மோசடியுடன் தொடர்புடையவை. அந்த வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.64,447 கோடி மதிப்பிலான இணைய நிதி மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டின் சைபர் பாதுகாப்பைப் பலப்படுத்த டிஜிட்டல் தடயவியல், தரவுப் பகுப்பாய்வு முதலான வழிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.