

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது சாதி விவரங்களைத் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கேட்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சமத்துவத்தை நோக்கிய முக்கிய நகர்வாகும்.
அதேநேரம், இடஒதுக்கீட்டின் நோக்கத்தைச் சிதைத்துவிடாத வகையில் இதைக் கவனமாகப் பின்பற்றுவது அவசியம். சாதி, மதப் பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 1973இலும், பிறகு மீண்டும் 2000இலும், பள்ளிச் சான்றிதழ்களில் ‘மதம் இல்லை, சாதி இல்லை’ எனக் குறிப்பிட அனுமதிக்கும் அரசாணைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், நடைமுறையில் பல கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் சாதி, மதம் தொடர்பான விவரத்தைப் பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயம் நீடிக்கிறது.
இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை விண்ணப்பப் படிவம், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூகம் குறித்த விவரங்களைக் கட்டாயமாக நிரப்ப வேண்டும் என்னும் நிபந்தனையை விதிக்கக் கூடாது; தனிநபர்கள் விரும்பினால் மட்டுமே அதைக் குறிப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிப் பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.