

நோய்ப் பரவல், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு, பேறுகால மரணங்கள், புதிய தொற்று பாதிப்பு உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மாதந்தோறும் வெளியிடுவதைத் தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை நிறுத்தியிருக்கிறது. அதோடு அரசின் மருத்துவத் திட்டங்களின் தாக்கங்கள், மருத்துவ ஆராய்ச்சி, நோய் தொடர்பான தகவல்கள் அடங்கிய மருத்துவ இதழ் வெளியிடப்படுவதும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதேவேளையில், இந்தத் தரவு வெளியீடு முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றும், மேலும் பல புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட வடிவில் விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
எனினும், தரவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகக் கூறி, இந்த நடைமுறையை மாற்றுவது அவசியமா என்னும் கேள்வி எழுகிறது. நாட்டிலேயே பொதுச் சுகாதாரத்தில் பல்வேறு அலகுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்புக்கென 1992இல் தனி இயக்ககம் தொடங்கிய முதல் மாநிலமும் தமிழ்நாடுதான். சுகாதாரத் துறையின் முதுகெலும்பாகச் செயல்படும் இந்த இயக்ககம், ஆரம்பச் சுகாதாரச் சேவைகள், தடுப்பூசிகள், தாய் - சேய் நலம், தொற்றும் நோய்களின் பரவல் - கட்டுப்பாடு, தொற்றாநோய்க் கட்டுப்பாடு, சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொள்கிறது.