

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான விதிமுறைகளில் தமிழக அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்கள் உயர் கல்வி வணிகமயமாக்கல், உள்கட்டமைப்பில் சமரசம் போன்றவற்றைப் பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஒப்புதல் பெறுவதற்காக இச்சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்குத் தமிழக ஆளுநர் அனுப்பியுள்ள நிலையில், இதுபோன்ற முக்கியமான சட்டங்கள் இயற்றும் / திருத்தும் பணிகளை மிகக் கவனமாக அரசு முன்னெடுக்க வேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கின்றன.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2019இல் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் 4ஆம் உட்பிரிவு (அ) தமிழகத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவ 100 ஏக்கருக்கும் குறையாத அளவுக்கு நிலம் தேவை என்று கூறுகிறது.
மேலும் 46ஆம் பிரிவின் துணைப் பிரிவு (1)இல் ஒரு தனியார் பல்கலைக்கழகம் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது, அதன் நிர்வாகத்துக்கான செலவினங்களை ஈடுசெய்யும் நோக்கத்தில் ரூ.50 கோடி தொகையை அறக்கட்டளை நிதியாக நிறுவ அச்சட்டம் வழிவகை செய்தது.