

இந்தியாவின் தொழில் துறை 2026 ஆகஸ்ட் மாதத்தில் அபார வளர்ச்சி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் நேர்மறையான அறிகுறி என்றே சொல்ல வேண்டும்.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் தொழில் உற்பத்தித் துறை முக்கியப் பங்காற்ற வேண்டும். அது இந்தியாவில் சாத்தியமாகி வருவதைச் சமீபத்திய தரவுகள் உணர்த்துகின்றன. நாட்டின் தொழில் துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் 8% வளர்ச்சி கண்டிருப்பதாக மத்தியப் புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2026 ஜூலையில் இந்த வளர்ச்சி 6.7 – 7.4% சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தித் துறையில் 9% வளர்ச்சியும் மின்சாரம், எரிவாயு விநியோகத் துறையில்12.3% வளர்ச்சியும் சாத்தியமாகியிருப்பதன் மூலம், தொழில் துறைவளர்ச்சி 8% என்கிற சாதகமான அம்சத்தை எட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 2025 ஆகஸ்ட்டில் 114.2 அளவாக இருந்த நிலையில், தற்போது 123.3ஆக அதிகரித்திருப்பது தொழில் உற்பத்தி வளர்ச்சியில் நேர்மறையான அம்சம்.
தொழில் துறையில் உற்பத்தித் துறை, மின்சாரம், மூலதனப் பொருள்கள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவை இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாகவே 8-9% என்கிற வளர்ச்சியை உற்பத்தித் துறை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை முதுகெலும்பாக இருப்பது மட்டுமன்றி, உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பிலும் நேரடியாகத் தாக்கம் செலுத்தி வருவதை மறுக்க முடியாது.