

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள முக்கியப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பில், வெறும் 26 பணியிடங்களுக்கான அழைப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டிருப்பது விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
மாநில அளவிலான அரசுப் பணியிடங்களை நிரப்ப 70க்கும் அதிகமான அரசுத் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்திவருகிறது. இதில் துணை ஆட்சியர், உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் முதலான உயர்நிலை அதிகாரிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன.
குரூப் 1 தேர்வைப் பொறுத்தவரை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ளது. 2019இல் 139 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 2020இல் வெறும் 69 இடங்களே நிரப்பப்பட்டன. பிறகு 2022இல் 92 ஆக உயர்த்தப்பட்டது.
2024இல் 90 இடங்கள், 2025இல் 78 இடங்களே நிரப்பப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மிகக் குறைவாக 26 இடங்களை மட்டுமே நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது போட்டித் தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.