

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சுரங்கப் பாதைக் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவு, பேரிடர் நெருக்கடி கொண்ட இடங்களில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காட்டுயிர் சரணாலயங்கள், தேயிலைத் தோட்டங்கள் என எதிரெதிர்த் தன்மைகளோடு வளர்த்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வயநாடு முதன்மையானது. கோழிக்கோடு உள்பட மலபார் கடற்கரையோடு வயநாட்டை இணைக்கும் தாமரச்சேரி மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இதற்கு மாற்றாகத்தான் அனக்கம்பொயில்-மேப்பாடி இரட்டைச் சுரங்கப்பாதை சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 8.73 கி.மீ. நீளம் கொண்ட இந்த நான்கு வழிச் சாலை, மரிப்புழா என்னும் இடத்தில் தொடங்கி கல்லாடி என்னும் இடத்தில் முடிகிறது. இந்தத் திட்டத்துக்காகப் பாறை உடைக்கும் பணி மார்ச், 2026இல் தொடங்கியது.
இந்நிலையில், கனமழை காரணமாக கல்லாடி அருகே ஜூலை 7 அன்று நண்பகலில் நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்துக்காகத் தோண்டப்பட்டுக் குவிக்கப்பட்டிருந்த மண், கட்டுமானக் கழிவுகள், பாறைகள் ஆகியவை வெள்ளம்போல வேகமாக நகர்ந்ததில், டேங்கர் லாரி, மண் தோண்டும் வாகனம் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.