

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் மின்சார இணைப்பு இல்லை எனவும் ஏறத்தாழ ஒரு லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பிட வசதி இல்லை எனவும் நிதி ஆயோக் தெரிவித்திருக்கும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.
2026இல் ‘இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை’ குறித்த கொள்கை அறிக்கையை நிதி ஆயோக் அண்மையில் வெளியிட்டது. இந்தியாவின் அரசுப் பள்ளிகளில் கல்வி, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தற்காலச் சூழல் அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிகளில் கழிப்பிட வசதி முன்பைவிட ஓரளவு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருந்தபோதும், 98,592 பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லை என்றும், 61,540 பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய நிலையில் கழிப்பறைகள் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 55%இலிருந்து 91.9%ஆக அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், 1.19 லட்சம் பள்ளிகள் இன்னும் மின்சார வசதி இன்றிச் செயல்படுகின்றன.