

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 70 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்தவர்கள் மீது அரசு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பது, ஆணையம் அமைத்ததின் நோக்கத்தை நிறைவேற்றும்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 2024 ஜூன் 19 அன்று ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்ததில் 70 பேர் உயிரிழந்தனர். 161 பேர் கடுமையான உடல் பாதிப்புகளுடன் உயிர் பிழைத்தனர்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீட்டை அப்போதைய திமுக அரசு வழங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. இதன் விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.