

‘வரிவிதிப்பு, பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2026’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அச்சம் மக்களிடம் பரவியுள்ளது. பயனர்களுக்கு யுபிஐ இலவசம்தான் என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் வகையில் கட்டணம், தீர்வு அமைப்புகள் சட்டத்தைத் திருத்துவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரி செலுத்துதல், தீர்வு முறைமைச் சட்டம்-2007, வருமான வரிச் சட்டம்-2025, 2026ஆம் ஆண்டின் நிதிச் சட்டம் ஆகியவற்றை மேலும் திருத்துவதற்கான மசோதா இது. இந்த மசோதாவில், வணிகர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த மின்னணுப் பரிவர்த்தனை முறைகளுக்கான கட்டண விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின்கீழ், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு இணைய வழியில் நிகழ் நேரத்தில் உடனடிப் பணப் பரிமாற்றம் செய்யும் ஆர்டிஜிஎஸ் (RTGS), என்இஎஃப்டி (NEFT) முதலானவற்றுக்கு ஏற்கெனவே சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த கட்டண விலக்கு விதியில் மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.