ஆராய்ச்சிப் படிப்புகள்: அதிகரிக்கட்டும் மகளிர் பங்களிப்பு

ஆராய்ச்சிப் படிப்புகள்: அதிகரிக்கட்டும் மகளிர் பங்களிப்பு
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்வோரின் சதவீதம் (51.4), தேசியச் சராசரியைவிட (27.1) கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்கிறது தேசிய உயர் கல்விக் கணக்கெடுப்பு (2019-20). குறிப்பாக நம் மாநிலத்தில், ஆண்களைப் பெண்கள் ஒரு சதவீதத்தில் முந்தியிருக்கிறார்கள் என்பது இன்னொரு பெருமிதம்.

அதே நேரம், இந்தப் பெண்கள் முதுகலையில் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற பிரிவுகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் நெருடலைத் தருகிறது. ஸ்டெம் (STEM) எனக் குறிப்பிடப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

இந்தத் துறைகளில் உலக அளவில் பெரும் பாலின இடைவெளி நிலவுவதாக ஐநா தெரிவித்துள்ளது. பெண்களின் அளப்பரிய பங்களிப்புக்குப் பின்னரும் இந்தத் துறைகளில் அவர்களுக்கான இடம் மிகக் குறைவு. இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் நோபல் வென்ற ஆண்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கும் நேரத்தில், பெண்களின் எண்ணிக்கை 30ஐத் தொடவில்லை. உலக அளவில் 14% பெண்களே தொழில்நுட்ப - ஆராய்ச்சி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தச் சூழலிலும், இந்தியாவில் ஸ்டெம் படிப்புகளில் 43% பெண்கள் சேர்கிறார்கள் என்பது ஆறுதலளிக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்களின் உயர் கல்விக்கான திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் படித்து, தொழிற்கல்வியில் சேரும் மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது போன்ற திட்டங்கள், இந்தத் துறைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணங்களாக அமைந்தன.

ஆனால், இந்த எண்ணிக்கை போதாது. நிதிநல்கையிலும் பயிற்சிகளிலும் காட்டப்படும் பாலினப் பாகுபாடு, சமூகக் கட்டமைப்பு, ஆணாதிக்கம், திணிக்கப்படும் வீட்டு வேலைகள், திருமணம் - குழந்தைப்பேறு சார்ந்து எதிர்கொள்ளும் உடல் / உளவியல்ரீதியான நெருக்கடிகள் போன்றவை பெண்களுக்குப் பெரும் பின்னடைவைத் தருகின்றன. சமூகக் கட்டமைப்பையும் குடும்பப் பொறுப்புகளையும் காரணம்காட்டி ஆராய்ச்சிப் பணியிலிருந்து பெண்களை விலக்குவது, நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களுடைய பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது.

ஒரு காலத்தில் ஆரம்பக் கல்வியே கனவாக இருந்தபோது, ‘எட்டாம் வகுப்புவரை படித்தால் திருமண நிதியுதவி’ எனும் திட்டத்தின் வாயிலாகக் குழந்தைத் திருமண விகிதத்தைக் குறைத்ததோடு, பெண் கல்வியின் சதவீதத்தையும் உயர்த்திய மாநிலம் தமிழ்நாடு. அது பழம்பெருமையாக மட்டுமே தேங்கிவிடாமல், தொழிற்பிரிவுகளிலும் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் பெண்களின் இருப்பை உறுதிசெய்ய வேண்டும்.

ஸ்டெம் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 11ஆம் தேதி பெண்கள், சிறுமிகளுக்கான சர்வதேச அறிவியல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நீடித்த வளர்ச்சியை நோக்கிப் பெண்களை முன்னேற்றுவதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ஐநா அறிவித்திருக்கிறது.

“வகுப்பறைகள், ஆய்வகங்கள், முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற குழுக்கள் போன்றவற்றில் பெண் அறிவியலாளர்களை அமர்த்துவதன் மூலம் இதுவரை பயன்படுத்தப்படாத உலகின் பெரும் அறிவை வெளிக்கொண்டுவரலாம்” என்று கூறியிருக்கிறார் ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ். அவரது நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நம் அரசுகள் செயல்படட்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in