நிதிநிலை அறிக்கை: நிறைவேறட்டும் எதிர்பார்ப்புகள்

நிதிநிலை அறிக்கை: நிறைவேறட்டும் எதிர்பார்ப்புகள்
Updated on
1 min read

ஒவ்வோர் ஆண்டும் ஒட்டுமொத்தத் தேசமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தருணத்துக்காகத்தான். 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்யவிருக்கும் நிலையில், சாமானியர்கள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரின் கவனமும் அதன் மீது குவிந்திருக்கிறது.

2024 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த ஆண்டில் இடைக்கால நிதிநிலை அறிக்கைதான் தாக்கல்செய்யப்படும். ஆக, இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழுமையான இறுதி நிதிநிலை அறிக்கை. இந்த ஆண்டு 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் என அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதால், ஜனமயக்குத் திட்டங்கள் இடம்பெறலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து இந்தியச் சமூகம் இன்னமும் முழுமையாக வெளிவந்துவிடவில்லை. கூடவே, சர்வதேச அளவிலான பொருளாதார மந்தநிலையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 முதல் இதில் மாற்றங்கள் ஏதும் இல்லை எனும் நிலையில், அரசியல் காரணிகளின் அடிப்படையிலேனும் அது நிகழாதா என மாதச் சம்பளக்காரர்கள் காத்திருக்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புவது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நிதியமைச்சர் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளை ஓரளவேனும் பூர்த்திசெய்யும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்துக்கு இந்த முறையும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனக் கணிக்கப்படுகிறது. ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்காகக் கணிசமான நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எனும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

எல்லையில் பிரச்சினைகள் அதிகரிகரித்துவரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வழக்கம்போல அதிகமாகவே இருக்கும். கூடவே கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான நிதி, சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டியிருக்கிறது. அரசின் மூலதனச் செலவும் அதிகரிக்கப்படும் என நம்பலாம்.

இலவசத் திட்டங்கள் தொடர்பாக பாஜக அரசு எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்திவந்தாலும், மானியங்கள் விஷயத்தில் அத்தனை எளிதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனச் சொல்ல முடியாது. ஜி20 அமைப்பின் ஓராண்டு காலத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பொருளாதாரரீதியில் வலிமையடைவது சர்வதேசச் சமூகத்தின் பார்வையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும்.

கூடவே, காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அரசின் ஒவ்வொரு நகர்வும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அது நிதிநிலை அறிக்கையில் உறுதியுடன் வெளிப்படும் என நம்புவோம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in