

கல்லூரி ராகிங், மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில், ராகிங் என்ற பெயரால் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதுபோல் தமிழகத்தில் வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மூத்த மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் 1996இல் நடந்த நாவரசு கொலை, ராகிங்கின் மோசமான விளைவுக்கு உதாரணம். இதைத் தொடர்ந்து, 1997இல் தமிழ்நாட்டில் ராகிங் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 2001இல் உச்ச நீதிமன்றம் ராகிங்கைத் தடைசெய்தது.
ஆங்கிலக் கலாச்சாரமாகப் பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகமான ராகிங், மாணவர்களை வசீகரிக்கும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்தது. ராகிங்கை வளர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. 2007இல் வெளியான ஓர் அறிக்கை, 7 ஆண்டுகளில் 31 மாணவர்கள் ராகிங்கினால் இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.
ராகிங் குறித்த புகார்களும் பெருகிவந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
உச்ச நீதிமன்றம் 2001இல் பிறப்பித்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என ராகவன் குழு அறிக்கை சுட்டிக்காட்டியது. எடுத்துக்காட்டாக, விண்ணப்பப் படிவம் அளிக்கப்படும் காலத்திலேயே ராகிங் தடைசெய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், அது பல கல்வி நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் குழுவின் பரிந்துரையின் பெயரில் உச்ச நீதிமன்றம் ராகிங் தடுப்புக்கான பல ஆணைகளை 2009இல் பிறப்பித்துள்ளது; ராகிங்குக்கு எதிரான வழிமுறைகளை மொழிந்தது. அவை இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்கு உரியதுதான்.
ராகிங் மனித உரிமையை மீறும் செயல் என்பது குறித்துச் சுவரொட்டிகள் வளாகத்தில் வைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே வழிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், வேலூர் சம்பவத்துக்குப் பிறகுதான் சில கல்லூரிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒடிசாவில் உள்ள பீமா பாய் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஏப்ரலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அதைக் காவல் துறை தற்கொலை வழக்காகப் பதிவுசெய்தது. ஆனால், மாணவரின் தந்தை அது ராகிங் மரணம் என சான்றுகளைச் சமர்ப்பித்த பிறகும் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் காவல் அதிகாரி ஒருவர், ‘கல்லூரி வளாகத்தில் இது சாதாரண விஷயம்’ எனச் சொல்லியிருக்கிறார்.
ராகிங் குறித்தான சமூக மனநிலையின் வெளிப்பாடு இது. கல்லூரிகளில் நிகழும் இது போன்ற ராகிங், மாணவர்களுக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அனுபவத்தை வழங்கும் என்னும் தவறான பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் இவ்வளவு திடமான சட்டங்கள் இயற்றப்பட்டும் ராகிங் கலாச்சாரம் தொடர்ந்துவருவதற்கான காரணம். ராகிங், அதிகார மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதாக இப்போது இருக்கிறது.
இம்மாதிரியான மாணவர்களைத்தான் திரைப்படங்கள் நாயகர்களாகச் சித்திரிக்கின்றன. ராகிங்கைத் தடுக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே போதுமானவை. ஆனால், அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் கடைப்பிடிக்கவும் கல்லூரிகளும் மாணவர்களும் முன்வர வேண்டும். அதற்கு ராகிங் குறித்து சமூக மனநிலையும் மாற வேண்டியது அவசியம்.