

தடைகள், கட்டுப்பாடுகளைத் தாண்டி தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் இந்த ஆண்டு தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை விதித்திருந்தன. மேற்கு வங்கம், ஹரியாணாவில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், பட்டாசு வெடிப்பதால் வெளியிடப்படும் பிஎம் 2.5 நுண்துகள்களின் அளவு கொல்கத்தா, லக்னோ, நொய்டா உள்ளிட்ட கிழக்கு, வடக்கு நகரங்களில் மட்டுமே கடந்த ஆண்டைவிடக் குறைந்துள்ளன.
சென்னையிலும் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அமராவதியிலும் 2018ஆம் ஆண்டின் தீபாவளி நாளுக்குப் பிறகு மிக அதிக அளவிலான பிஎம் 2.5 நுண்துகள்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு பிஎம் 2.5 வெளியாகியுள்ளது. சென்னையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, நைட்ரஜன் டைஆக்ஸைடு, சல்பர் டைஆக்ஸைடு உள்ளிட்ட காற்று மாசுபடுத்திகள் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நுரையீரல் செயல்பாட்டைப் பாதிக்கும் நைட்ரஜன் டைஆக்ஸைடு, சல்பர் டைஆக்ஸைடு ஆகியவற்றின் அளவு இந்த ஆண்டு தீபாவளி அன்று உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி அன்று பதிவான காற்று தரக் குறியீடு (Air Quality Index) குறைந்தபட்சமாக பெசன்ட் நகரில் 345 என்றும் அதிகபட்சமாக செளகார்பேட்டையில் 786 என்றும் பதிவாகியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ள காற்றுக்கான தர அளவுகோல்களின்படி இந்தக் குறியீடானது 301இலிருந்து 400வரை இருப்பது நீண்டகால சுவாசப் பிரச்சினை உடையோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். 401ஐக் கடப்பது நல்ல உடல்நலத்துடன் இருப்போருக்கும் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தவும் நுரையீரல்/இதய நோயாளிகளுக்குத் தீவிர உடல்நலப் பிரச்சினைகளை விளைவிக்கவும் கூடிய கடுமையான மாசுபாடாகும்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது கொண்டாட்டத்தின் அங்கமாக ஆகிவிட்டது. பட்டாசு உற்பத்தி, விற்பனைத் தொழிலுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வணிகர்களின் வாழ்வாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் பட்டாசு வெடிப்பதை முழுமையாகத் தடை செய்வது சாத்தியமற்றது. அதே நேரம் பட்டாசு வெடிப்பதால் விளையும் சூழலியல் மாசுபாட்டினைக் கணக்கில் கொண்டுதான் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பட்டாசு தொடர்பான கட்டுப்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் உறுதிப்படுத்த வேண்டும். அவற்றுக்கான கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். பொதுமக்களும் பட்டாசு வெடிப்பதன் மீதான கட்டுப்பாடுகளை மத நம்பிக்கைக்கு எதிரானதாகப் பார்க்கும் மனப்போக்கினைக் கைவிட வேண்டும். நம்முடைய ஒருநாள் கொண்டாட்டம் சக மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் நம் அனைவரின் வசிப்பிடமான புவிக்கும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை உணர வேண்டும்.