

இந்தியத் திருநாட்டின் 75-வது சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, எதிர்வரும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் நாடு முழுவதும் அனைவரும் தங்களது வீடுகளில் மூவண்ணக் கொடியை ஏற்றியோ அல்லது காட்சிப்படுத்தியோ கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய அரசமைப்பு அவையில் ஜூலை 22, 1947 அன்று தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் அவர் விடுத்துள்ள இச்செய்தி, இளைய தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் உதவும். பிரதமரின் இந்த அழைப்பையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ள ‘ஹர் கர் திரங்கா’ என்ற மூவண்ணக் கொடி இயக்கத்தை வெற்றிபெறச் செய்ய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு என்று ஒரு தனிக் கொடி வேண்டும் என்பது விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களின் நீண்ட நாள் கனவு. அதற்கான முயற்சிகள் 1906-ல் கொல்கத்தாவிலும் 1907-ல் பாரிஸிலும் முன்னெடுக்கப்பட்டன. 1917-ல் தன்னாட்சி இயக்கத்தாலும் தேசியக் கொடியின் மாதிரி ஒன்று பரிந்துரைக்கப்பட்டது.
என்றாலும், 1921-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தின்போது, ஆந்திர இளைஞர் ஒருவரால் அளிக்கப்பட்ட இருவண்ணக் கொடியைச் சிறு மாற்றங்களுடன் காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். இந்துக்களைக் குறிக்கும்வகையில் காவி நிறமும், முஸ்லிம்களைக் குறிக்கும்வகையில் பச்சை நிறமும் கொண்டிருந்த அந்த இரு வண்ணக் கொடியில், மற்ற அனைத்து சமயத்தவர்களையும் குறிக்கும்வகையில், காந்தியடிகள் வெள்ளைப் பட்டையைச் சேர்த்தார்.
என்றாலும், தற்போது நாம் போற்றிவரும் மூவண்ணக் கொடியின் முன்மாதிரி 1931-ல்தான் அங்கீகரிக்கப்பட்டது. மூவண்ணக் கொடியில் வெள்ளை நிறத்தின் நடுவே காந்தியடிகள் பரிந்துரைத்தவாறு கைராட்டை அப்போது இடம்பெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவமும் அக்கொடியை ஏற்றுக்கொண்டிருந்தது.
அரசமைப்பு அவையால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய தேசியக் கொடியில், கைராட்டைக்குப் பதிலாக அசோகர் நிர்மாணித்த சாரநாத் தூணில் உள்ள தர்மச்சக்கரம் இடம்பெற்றுள்ளது. எனினும், நம்முடைய தேசியக் கொடியின் மூன்று நிறங்கள் சமயங்களை அல்ல, தத்துவங்களின் பிரதிபலிப்பாகவே தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
காவி நிறம் வலிமையையும் வீரத்தையும் குறிக்கிறது; வெண்மை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது; பச்சை நிறம் வளமையையும் நம்பிக்கையையும் குறிக்கிறது என்கிறது மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளம்.
விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவூட்டும் நம் தேசியக் கொடி, நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய உண்மையை வலியுறுத்துவதோடு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் அளிக்கிறது.
அமுதப் பெருவிழாவில் நாடு முழுவதும் வீடுகள்தோறும் பட்டொளி வீசிப் பறக்கவிருக்கும் தாயின் மணிக்கொடி, அதில் அடங்கியுள்ள ஒவ்வொரு நிறத்துக்கான அர்த்தத்தையும் அதை எட்டுவதற்கான மன உறுதியையும் இளைய நெஞ்சங்களில் உருவாக்கட்டும்.