

மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தமிழுக்கான உரிமைக் குரல் ஒலித்திருக்கிறது. இம்முறை, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பொதுத் துறை வங்கிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளில், தமிழகத்தில் உள்ள வங்கிகளில் குறிப்பாகக் கிராமப்புற வங்கிகளில் தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னென்ன என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் அளித்துள்ள பதிலில், உள்ளூர் மக்கள் வங்கிச் சேவைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்காக வங்கி ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் பிராந்தியத்தின் மொழியில் பயிற்சி வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
இணையமைச்சர் அளித்துள்ள பதிலில், வங்கிகளில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிச் சேவைகள் தொடர்பான பிரசுரங்கள் தமிழில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்கிச் சேவை தொடர்பான படிவங்கள், பற்றுவரவு ஏடு உள்ளிட்ட அனைத்து அச்சிட்ட படிவங்களிலும் தமிழ் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். பணம் எடுக்கும் இயந்திரங்களில் ஏற்கெனவே தமிழ் பயன்பாட்டில் இருப்பதையும் அவர் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார். இணையவழி மற்றும் கைபேசிவழி வங்கிச் சேவைகளிலும் தமிழ் மொழி இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவருவதாக நிதித் துறை இணையமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருந்தாலும், பணம் எடுக்கும் இயந்திரங்களில் மட்டுமே தமிழ் பயன்பாட்டில் இருந்துவருகிறது. வங்கிப் படிவங்களில் தமிழும் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும் அது இன்னும் முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த ஆண்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அஞ்சலகப் படிவங்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே இருப்பதாக மத்திய அமைச்சருக்கும் தலைமை அஞ்சல் பொதுமேலாளருக்கும் கடிதம் எழுதி கவனப்படுத்தினார்.
அதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் படிவங்களில் தமிழும் இடம்பெற்றிருக்கும் என்ற உறுதியை அஞ்சல் துறை அளித்தது. தற்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், வங்கிப் படிவங்களில் தமிழ் இடம்பெறுவதை நாடாளுமன்றத்தின் வழி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பொதுத் துறை வங்கிகளில் அகில இந்திய அளவில் பணிநியமனங்கள் நடைபெறுகின்றன என்பதால், எந்தவொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் பிரதான மொழியைப் பேசுபவர்தான் பணியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோருவது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல.
ஆனால், பிறிதொரு பிராந்தியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்தப் பிராந்தியத்தின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஊரகப் பகுதிகளைப் பொறுத்தவரை, வங்கி ஊழியர்கள் கண்டிப்பாகப் பிராந்திய மொழியை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். உத்தரவுகளாக மட்டுமின்றி, நடைமுறையிலும் இதைச் செயல்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சரின் பதில், அதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.