

அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமாகக் குறிப்பிடும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது காலத்துக்குப் பொருந்தாமல் பிற்போக்கானதாக இருக்கிறது. நாட்டின் உயர்ந்த நீதியமைப்பின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஒருங்கே அளிக்கிறது. நமக்குப் பக்கத்திலிருக்கும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளும் அவதூறு வழக்குகளை உரிமையியல் சார்ந்த சிவில் குற்றங்களாக மட்டுமே எடுத்துக்கொண்டு விசாரிக்கின்றன.
அவதூறாகப் பேசுவதை இந்தியத் தண்டனைச் சட்டப்படியான கிரிமினல் வழக்காக விசாரிப்பதால் குடிமக்களின் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்வகையிலான தடை எதுவும் ஏற்படுவதில்லை என்று மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.ஆனால், அரசின் சட்டத்தொகுப்பில் இந்த கிரிமினல் சட்டப் பிரிவுகள் இருப்பது, ஆட்சியில் இருப்பவர்களை நியாயமான முறையில்கூட விமர்சிக்க முடியாமல் தடுப்பதற்குத்தான் பயன்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களாக போதுமான சம்பவங்கள் இருக்கின்றன.
அரசியல் சாசனத்தில் உள்ள சட்டக்கூறு எண் 19(1) (A) பேச்சு சுதந்திரத்தை வரையறை செய்கிறது. குடிமக்களுக்கு வாழும் உரிமையைத் தரும் 21-வது சட்டக்கூறின் ஒரு பகுதியாக தன்னுடைய நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு செயற்கையான நடுநிலையை நீதிமன்றம் உருவாக்க விரும்புகிறது. அவதூறுகளால் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக உரிமையியல் சட்டப்படி வழக்குகள் தொடரும் வாய்ப்பு இருக்கும்போது, குற்றவியல் வழக்குகளாகவும் அவதூறு வழக்குகளை நடத்தும் வாய்ப்பை இன்னும் வைத்துக்கொண்டிருப்பதை நியாயப்படுத்துவதற்கான அவசியம் இல்லை. பேச்சுச் சுதந்திரம் என்பது ஒருவரை அவதூறாகப் பேசுவதற்கான சுதந்திரம் அல்ல என்பது நியாயம்தான் என்றாலும், பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு எதிராக இப்படிக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர அனுமதிப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
இந்திய அரசியல் சாசனத்தில் பேச்சுச் சுதந்திரத்துக்கான நியாயமான கட்டுப்பாடுகளில் ஒன்றாக ‘அவதூறு’ தொடர்பானவை இருந்தாலும், அவதூறு வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக நீடிக்கச் செய்வது என்பது நியாயமானதல்ல.
இந்தியாவில் பெரும்பாலும் கிரிமினல் தன்மையுடனான அவதூறு வழக்குகள் தனி நபர்களுக்கு இடையில் நடப்பதில்லை. அரசு அதிகாரிகள், ஆட்சியில் இருப்பவர்கள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு இடையேதான் நடக்கின்றன. அவை தங்களுக்கு எதிராக ஊடகங்களிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் தீவிரமான விசாரிக்கும் தன்மையோடு கேள்விகள் வரும்போதுதான் தங்களைக் காத்துக்கொள்ளும் கேடயமாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்துகின்றன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500-வது பிரிவுகள் செல்லுபடியாகுமா என்று கேள்விக்கு உட்படுத்துவது சமீபகாலத்தில் பேச்சுச் சுதந்திரம் தொடர்பாக எழுந்துள்ள பெரும்பிரச்சினைதான். இதுதொடர்பான மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்துள்ளது. அரசியல் சாசனம் தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்காகக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இந்த மனுவைப் பரிசீலிக்கலாம் என்று அவர்கள் பரிந்துரை செய்து அனுப்பியிருக்கலாம்.
தனிநபருக்கான தனிப்பட்ட புகழைக் காப்பாற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அவசியம் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொள்வோம். ஆனால், அரசு, அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் அரசியல் சட்டத்தின் 21-வது சட்டக்கூறு அளிக்கும் உரிமை எவ்வாறு பொருந்தும்? எனவே, இந்த சட்டப் பிரிவை நீக்குவதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றம் எடுக்கக்கூடும் என்பதே தற்போது கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.