

பெருந்தொற்று அச்சங்கள் ஓரளவு தணிந்து, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.
பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் களையும் நோக்கத்தில், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தைப் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தொடங்கி வைத்துள்ள தமிழக முதல்வர், பள்ளிப் படிப்பின் அவசியம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைக் கைவிடும் முடிவைப் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றிருப்பது பெற்றோர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. எனினும், தற்போதுள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையிலும் இன்னும் தேர்வு நாள் அறிவிக்கப்படவில்லை. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டுச் சில மாதங்களாகியும் முடிவுகள் வெளிவரவில்லை.
கணினிவழியாக நடத்தப்படும் தேர்வுகளுக்கு உடனடியாக முடிவுகளை வெளியிடக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், ஏன் இவ்வளவு தாமதமாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தாமதத்துக்கு நிதிச் சுமை ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றபோதும் அது வளர்ச்சிக்கான முதலீடு என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகப் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்துவருவது பாராட்டுக்குரியது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மீட்டுருவாக்கம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
அதுபோல, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறுகிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கக்கூடும்.
அரசுக் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டிலும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. வழக்கம்போல, கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே வகுப்புகளை நடத்துவதற்கு வாய்ப்பாக 2,423 கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ள உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சிப் பட்டம் பெற்று, பத்தாண்டுகளுக்கும் மேலான பணியனுபவத்தைக் கொண்டிருந்தபோதிலும் மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.20,000 பெறும் நிலையில் இருக்கிறார்கள்.
அரசுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்களும் உரிய காலத்தில் இணை பேராசிரியராகவும் அதையடுத்து பேராசிரியராகவும் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. படித்துச் சாதித்தவர்கள் என்று லட்சம் பேரை உதாரணம் காட்ட முடியும் என்ற முதல்வரின் வார்த்தைகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பது உண்மை.
ஆனால், படித்ததாலேயே சாதிக்க முடியாதவர்கள் என்பதற்கு உதாரணமாய் இன்று கௌரவ விரிவுரையாளர்கள் இருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் உருவாகியிருக்கும் பேரெழுச்சி, பள்ளிப் படிப்புக்குப் பிறகான உயர் கல்வித் துறையிலும் உருவாகட்டும்.