

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நிலவிவரும் கருத்து முரண்பாடுகளின் விளைவாக, தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்துவதற்கான சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முன்வடிவு, துணைவேந்தரை நியமிப்பதற்கான அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு அளிக்க வகைசெய்கிறது. குஜராத், தெலங்கானா மாநிலங்களில் மாநில முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பொறுப்பு வகிப்பதையும் கர்நாடகத்தில் மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநர் துணைவேந்தரை நியமித்துவருவதையும் சுட்டிக்காட்டி இந்தச் சட்டத்திருத்தங்களுக்கான தேவை சட்டமன்றத்தில் முதல்வராலும் உயர் கல்வித் துறை அமைச்சராலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதவி என்பது முற்றிலும் மரபுசார்ந்ததேயொழிய அரசமைப்புரீதியாக அளிக்கப்பட்டது அல்ல. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே அவர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். என்றாலும், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கும் சட்டத்துக்கும்கூட அவரே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே அரசமைப்பு நடைமுறை. 1994-ல் இவ்வாறு பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்யும் சட்ட முன்வடிவுகளை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றியபோது ஆளுநர் அத்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.
மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழுவே பெரும் பகுதி நிதிநல்கைகளை அளிக்க வேண்டியிருப்பதையும் சட்டத்திருத்தங்களால் அத்தகு நிதிநல்கைகள் கிடைக்காமல் போகலாம் என்றும் அப்போது ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியது. பல்கலைக்கழகங்கள் சட்டப்படி தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இயங்கினாலும் நடைமுறையில் அவை பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துரைக்கும் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவையாகவும் அதன் நிதிநல்கைகளை எதிர்பார்த்திருப்பவையாகவும்தான் இன்றைக்கும் உள்ளன.
நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை இரண்டாவது முறையாக நிறைவேற்றியும் அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தாமதிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்லி திமுக தலைமையிலான அரசு ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது. இந்த மோதல் போக்கின் அடுத்த நகர்வாகவே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான சட்ட முன்வடிவும் அமைந்துள்ளது.
அரசமைப்பின் அடிப்படையில் ஆளுநர் எடுக்கும் முடிவுகளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்தைப் பின்பற்றியதாக அமைய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுவரும் சூழலில், மாநில அரசின் சட்டத்தின் அடிப்படையில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரே கையிலெடுத்துக்கொள்வது விவாதத்துக்கு உள்ளாவதில் வியப்பில்லை. ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்துக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் மாநில அரசும் உயர் கல்வித் துறையும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் குறைவான ஊதியத்தில் கௌரவப் பேராசிரியர்களைப் பணிக்கு அமர்த்தியிருப்பதைக் குறித்தும் கேள்விகள் தொடர்கின்றன. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பற்றி விவாதிக்கும் இந்நேரத்தில், உயர் கல்வித் துறையின் பெரும் பொறுப்புகளையும் மறந்துவிடக் கூடாது.