

மத்திய அரசு ஆர்வத்துடன் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் ‘சாகர்மாலா’ (சமுத்திர மாலை) எனும் திட்டத்தின் ஒருபகுதியாக, கடற்கரையோரப் பகுதிகளில் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. வரவேற்கத் தக்க முடிவு என்றபோதிலும் எப்போதோ நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய ஒன்று இது. ஆழ்கடல் துறைமுகங்களையொட்டி நிலப் பகுதிகளில் பெரிய அளவிலான, உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடிய வகையிலான தயாரிப்புத் தொழில்களுக்குத் தொழிற்பேட்டைகளை உருவாக்க ஊக்குவிப்பு வழங்குவது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மத்திய அரசின் கொள்கைக்கு உறுதுணையாக இருக்கும்.
நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியா சமீபத்தில் எழுதிய பொருளாதாரக் கட்டுரையில், உள்நாட்டுச் சந்தையின் தேவைக்கேற்ப மட்டும் பொருட்களைத் தயாரித்தால் பெருமளவு முதலீட்டைப் பிற நாடுகளிடமிருந்து பெற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். 1980-ல் வெறும் 3 லட்சம் மக்கள் தொகையை மட்டும் கொண்டிருந்த சீனத்தின் ஷென்ஷென் துறைமுகம் இப்போது 1 கோடியே 10 லட்சம் மக்களைக் கொண்டதாகவும் ஆண்டுக்கு 26,500 கோடி டாலர்கள் மொத்த உற்பத்தி மதிப்புள்ள நகரமாகவும் வளர்ந்திருக்கிறது. நிர்வாகரீதியாக உத்தரவிடுவதாலோ ஒரு சில சலுகைகளைச் சேர்த்து அளிப்பதாலோ இந்தியாவிலும் ஷென்ஷென் போன்ற தொழில்வளத் துறைமுகத்தை ஏற்படுத்திவிட முடியாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பாகவும் பல சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பாக சில அறிவிப்புகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தச் சீர்திருத்தங்களும் கரையோரப் பொருளாதார மண்டல அமைப்பும் இணைந்துதான் அத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியும். எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்துக்கும் இடையூறாகக் காணப்படும் குறைகளைப் போக்க மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகங்கள், ரயில்வேதுறை, நெடுஞ்சாலைத் துறையினர் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து முடிவெடுத்துச் செயல்பட வேண்டும்.
துறைமுகத் திட்டங்கள் மட்டுமல்ல உள்நாட்டில் உள்ள வளர்ச்சித் திட்டங்களும் குறித்த காலத்தில் முடிக்கப்பட போக்குவரத்து ஏற்பாடுகள் மிகத் தரமானதாக இருக்க வேண்டும். சரக்குகளைக் கையாளும் விஷயத்தில் இந்தியாவில் இன்னமும் மெத்தனமே பிரதானமாகக் காட்சியளிக்கிறது. இந்தியாவின் பெரிய துறைமுகங்களுக்குக் கப்பல்களில் வந்திறங்கும் சரக்குகள் உரியவர்களுக்கு அனுப்பப்பட சராசரியாக 38.23 நாட்களாகிறது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகே சரக்கு அனுப்பப்படுகிறது. துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் இடங்களில் காணப்படும் இடப் பற்றாக்குறை, போதிய சரக்கு ரயில் பெட்டிகள் கிடைக்காமல் காத்திருக்க நேர்வது போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன.
சரக்குகளை எடுத்துச் செல்லப் பயன்படும் சாலைகளின் மோசமான தரமும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்குப் பெருத்த இடையூறாக இருக்கிறது. அடித்தள உள்கட்டமைப்புகளின் தரக் குறைவும், பிற ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதும்கூட பிரச்சினைகளாகிவிடுகின்றன. சீனத்தைப் போல அல்லாமல் இந்தியாவில் ஏற்கெனவே துறைமுக நகரங்களில் மக்கள் தொகை அதிகமாகவே இருக்கிறது. எனவே கரையோரப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி வெற்றிகாண வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பும் சுமுகமான நட்புறவும் மிக மிக அவசியம்.