Published : 09 Mar 2020 09:18 am

Updated : 09 Mar 2020 09:18 am

 

Published : 09 Mar 2020 09:18 AM
Last Updated : 09 Mar 2020 09:18 AM

கூட்டுச் செயல்பாட்டின் தனித்துவத்தைக் காலம் நினைவுகூர்ந்திடும்!

joint-function

தமிழக அரசியலில் ஏறக்குறைய எண்பதாண்டு காலம் சுற்றிச்சுழன்றாடிய மூத்த தலைவர் க.அன்பழகனின் மரணம் எளிதில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறது. ஜனநாயக அரசியலில், ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்களுக்கும் கண்ணியத்துக்கும் அவரது நீண்ட நெடும் வாழ்வு என்றைக்கும் ஓர் உதாரணமாக விளங்கும்.

மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியலராக, மாற்றுக் கட்சியினருடன் விரோதம் பாராட்டாத பண்பாளராக, தனது கொள்கைகளைத் தெளிவுபட விளக்கும் ஓர் எழுத்துச் செயல்பாட்டாளராக, ஒரு தேர்ந்த வாசகராக, அவர் எப்போதும் இயங்கிக்கொண்டே இருந்தார். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை மேலவை உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுகாதாரம், சமூக நலம், கல்வி, நிதி என்று பல முக்கியத் துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்.


அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளை வகித்தபோதும் தன்னை ஒருபோதும் அவர் அதிகார மையமாக மாற்றிக்கொண்டதில்லை. பழுத்த அரசியல் அனுபவங்கள் இருந்தபோதும், கட்சி அரசியலுக்குள் தன்னை ஒருபோதும் குறுங்குழுவாதங்களுக்குள் அடைத்துக்கொள்ளாதவர். அமைச்சரவையில் அங்கம் வகித்ததைப் போலவே எதிர்க்கட்சி வரிசையில் களமாடும் ஜனநாயகப் பணியையும் சிரமேற்கொண்டவர். ஜனநாயக அரசியல் என்பது ஆளுவதில் மட்டுமல்ல, கேள்விகளை எழுப்புவதிலும் இருக்கிறது என்று நிரூபித்தவர்.

1977 தொடங்கி தன் மறைவு வரை திமுகவின் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார். இறுதி இரண்டு ஆண்டுகளில் மூப்பு காரணமாகத் தேர்தல் அரசியலிலிருந்து அவர் விலகிக்கொண்டார். அவருடைய காலத்திலேயே திமுகவுக்குள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்கள் என்றாலும் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்லும் பெருங்குணம் அவருக்கு வாய்த்திருந்தது.

அறுபதுகளின் இறுதியில் வலிமை பொருந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக மாநிலக் கட்சியொன்று ஆட்சிக்கு வந்ததன் மூலம் நாடே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்தது. அந்த அரசியல் முன்னுதாரணத்தை உட்கட்சிப் பிளவுகளின் காரணமாகத் தவறாக்கிவிடக் கூடாது என்பதில் அன்பழகன் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஏற்றுக்கொண்ட கொள்கை, ஈடுபடுத்திக்கொண்ட இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகத் தன்னைவிட இளையவர்களின் தலைமையை ஏற்கவும் எப்போதும் அவர் தயாராகவே இருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் உற்ற தோழனாக மட்டுமல்லாது, அவரோடு எல்லாவற்றையும் விவாதிக்கும் சகாவாகவும் இருந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக அரசியல் வாழ்வுக்குள் அடியெடுத்துவைத்தவர் அன்பழகன். ஏறக்குறைய 13 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. அரசியலில் பங்கெடுப்பதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினாலும் கடைசிவரைக்கும் ‘பேராசிரியர்’ என்றே அழைக்கப்பட்டு வந்தவர்.

“முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்” என்று கூறியவர் அன்பழகன். தன்னுடைய சுயத்தைக் காட்டிலும் தான் மானுடன் என்பதை முதன்மைப்படுத்திய அன்பழகன் இன, மொழி அரசியலைத் தாண்டி எல்லோருக்கும் தலைவராக உயர்ந்துநிற்பது அதனால்தான். நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கும் அவருக்கு நம் அஞ்சலி!


கூட்டுச் செயல்பாடுதனித்துவம்காலம்தமிழக அரசியல்மூத்த தலைவர்க அன்பழகன்மக்களின் நலன்அமைச்சரவைதிமுகபொதுச்செயலாளர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x