

மாவட்ட மருத்துவமனைகளில் ‘அரசு - தனியார் - கூட்டு' பங்கேற்பை (பிபிபி) ஏற்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசியம். மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி நடத்த அனுமதியும், மருத்துவக் கல்லூரியைக் கட்டிக்கொள்ள சலுகை விலையில் நிலமும் வழங்கலாம் என்று நிதி ஆயோக் தெரிவித்த யோசனையை மத்திய அரசு நிதியறிக்கையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்கு மத்திய, மாநில அரசுகள் மேலும் முயன்று பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைத் தங்கள் வசமே வைத்து, விரிவுபடுத்துவதே சரியானதாக இருக்க முடியும்.
எல்லா மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத நிலையில் மாநில அரசுகள் இருப்பது உண்மையே. அதனால், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் தனியாரை ஈடுபடுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அதிக வாய்ப்புகள் ஏற்படும், மருத்துவத்துக்காகும் செலவும் குறையக்கூடும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் நோயாளிகளை அரசு ‘இலவசமாக' அளித்து, மாவட்ட மருத்துவமனைகளின் ‘நிர்வாகம் - பராமரிப்பை' தனியாரிடம் ஒப்படைக்கவே இது வழிவகுக்கும். தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் தங்களிடம் வரும் நோயாளிகளை இலவச சிகிச்சை பெறுவோர், கட்டணம் செலுத்துவோர் என்று இரண்டு பிரிவுகளாக்கும். பிறகு, இவ்விருவரில் யார் முக்கியத்துவம் பெறுவார்கள் என்று விவரிக்க வேண்டிய அவசியமில்லை.
அரசும் தனியாரும் கூட்டாக மாவட்ட மருத்துவமனைகளை நடத்தும்போது தனியார் நிர்வாகம் நோயாளிகளிடம் உரிய கட்டணத்தைப் பெற்று, மருத்துவமனையை நடத்தலாம் என்று உத்தேசத் திட்டம் அனுமதிக்கிறது. இந்த யோசனைக்குத் தமிழ்நாடு போன்ற சுகாதார வசதியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட மாநிலங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளுடன் இருப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்ததாகவே இருக்கின்றன. சுகாதார வலையமைப்பில் முக்கியமான கண்ணிகளாக இருக்கும் மாவட்ட மருத்துவமனைகளை இப்படித் தனியாரிடம் ஒப்படைக்க மாநிலங்கள் தயாரில்லை.
அரசு மருத்துவத் துறை சேவையை மையமாகக் கொண்டது. தனியார் மருத்துவத் துறை லாபத்தில் அக்கறையுள்ளவை. அரசு மருத்துவமனைகளும் கட்டமைப்பும் வலுவாகவும் விரிவாகவும் இருந்தால்தான் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டணங்கள் குறையும்.
அரசால் நடத்த முடியாத சேவைகளில் லாப நோக்கம் இல்லாமல் சேவையாக நடத்தப்பட வேண்டியவைதான் தனியார் மருத்துவமனைகள். மொத்த உற்பத்தி மதிப்பில் 2%-க்கும் அதிகமாக நிதி ஒதுக்கி, மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் என்ற இலக்கை முதலில் எட்ட வேண்டும். பிறகு தரமான, செலவு குறைவான சுகாதார வசதிகளை அளிக்க வேண்டும். சுகாதாரத் துறை சேவையில் அரசு முக்கியப் பங்கு வகிப்பது மிக மிக அவசியம்.