விசாரணை என்பதே தண்டனையாகி விடக் கூடாது 

விசாரணை என்பதே தண்டனையாகி விடக் கூடாது 
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு 105 நாட்களுக்குப் பிறகு நிபந்தனையின்பேரில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

எவர் ஒருவர் குற்றம் இழைத்திருந்தாலும் அவர் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், விசாரணையில் இருக்கும் ஒருவரை எப்படி அணுக வேண்டும் என்ற கருத்துகளை சிதம்பரத்துக்குப் பிணை வழங்கியதன் ஊடாக உச்ச நீதிமன்றம் மீண்டும் பொதுத் தளத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பது இந்தச் சமயத்தில் முக்கியமானதாகத் தோன்றுகிறது.

நீதிமன்றம் விசாரிக்க அழைக்கும்போது ஒருவர் வர மாட்டார் என்ற நிலையில், அவரைக் கைதுசெய்து காவலில் வைக்கலாம். விசாரணைக்கு முன் சந்தேகத்துக்கு உள்ளானவரைக் காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க கைது ஒரு நடைமுறையாக இருந்தாலும், தப்பிச் செல்ல மாட்டார், விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார் என்பவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்குக் காரணமே இல்லை.

வழக்கின் ஆதாரங்களைக் குலைத்துவிடுவார், சாட்சிகளை அச்சுறுத்தி மிரட்டுவார் என்ற நிலையில், ஒருவரைக் கைதுசெய்வதில் தவறில்லை. சில வேளைகளில் வழக்கின் தீவிரத்தன்மையால் கைதுசெய்வது அவசியமாகலாம். ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும்கூடப் பிணை வழங்க மறுப்பது சரியல்ல.

சமீப காலமாகப் புதுவித நடைமுறை ஒன்று நீதித் துறையில் நுழைந்திருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றி சீல் இட்ட உறைக்குள் உள்ள விஷயம் அரசுத் தரப்பால் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்டு, அதை அவர்கள் மட்டும் படித்துப் பார்த்து, அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிப்பதே அது. உறையிலுள்ள விஷயம் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை.

இப்படி சீல் இட்ட உறையில் உள்ள விஷயங்களை நீதிபதிகள் படித்து, வழக்கில் ஒருதலைப்பட்சமாக முடிவுக்கு வருவது கூடாது என்று உச்ச நீதிமன்றம் இப்போது தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ‘மிகவும் ரகசியம்’ என்று குறிப்பிடப்படும் ஆவணங்களில் உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் ஆபத்தானவை என்றாலும் அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுத் தரப்புடையது. அப்படி நிரூபிக்காமல் வெறும் ஆவணமாகவே வைத்துக்கொண்டு, பிணையை மறுப்பது சரியா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் கேள்வி.

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு முகமைகள், வழக்கை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் சான்றுகளையும் விரைந்து சேகரித்து, வழக்கு விசாரணையையும் துரிதமாக நடத்த வேண்டும். அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இழுத்தடிக்காமல், விரைந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற தனி நீதிமன்றங்கள் நிறுவப்படுவது நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்களை நாடக பாணியில் திடீரெனக் கைதுசெய்வதும், பிறகு விசாரணையைத் தொடங்காமல் நீண்ட காலம் விசாரணைக் கைதியாகவே சிறையில் வைத்திருப்பதும் தேவையற்ற செயல்கள், தவிர்க்கப்பட வேண்டும். விசாரணையே தண்டனையாவது நீதியாகாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in