Published : 22 Jul 2019 09:57 AM
Last Updated : 22 Jul 2019 09:57 AM

குவியும் பிளாஸ்டிக் கழிவு… என்ன செய்யப்போகிறோம்?

இந்தியா எதிர்கொண்டிருக்கும் பெரும் அச்சுறுத்தல்களுள் ஒன்று அதன் பிளாஸ்டிக் கழிவு. உலகின் மிகப் பெரிய சந்தைகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தச் சந்தையின் நுகர்வுப் பசிக்கு ஏற்ப பொருளுற்பத்தி செய்யப்படும்போது இணைச் செயல்பாடாக பிளாஸ்டிக் உற்பத்தியும் அதே வேகத்தில் நிகழ்கிறது. தங்கள் பொருட்களை மக்களிடம் பிளாஸ்டிக் உறைகளில் கொண்டுசேர்ப்பதில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள், அதற்குப் பிறகு அந்த பிளாஸ்டிக் உறைகளுக்கு என்ன ஆகிறது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. அப்படிப்பட்ட 52 நிறுவனங்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். உள்நாட்டு-வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், இணைய வர்த்தக நிறுவனங்கள் போன்றவை இதில் உள்ளடங்கும். ‘அமேஸான்’, ‘ஃப்ளிப்கார்ட்’, ‘பதஞ்சலி ஆயுர்வேத்’, ‘பிரிட்டானியா’ போன்ற கம்பெனிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கின் கால் தடங்களை அதிக அளவில் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களும் மற்றவையும் உடனடியாக இதற்கு எதிர்வினை ஆற்றியாக வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளில் உற்பத்தியாளரின் பொறுப்பு நீட்சி என்ற கோட்பாட்டைக் கொண்டுவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்களின் பிளாஸ்டிக் கழிவுகளை அந்த நிறுவனங்களே சேகரித்தல் என்பது நல்ல யோசனை. அதை ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் உள்ளாட்சி அமைப்போ மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனங்களோ இந்தக் கோட்பாட்டை வணிக நிறுவனங்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தத் தவறிவிட்டன. 2016-ல் விதிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, சில திருத்தங்களும் செய்யப்பட்டன. உற்பத்தியாளர்களும் தயாரிப்புகளின் உரிமையாளர்களும் தங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஆறு மாதத்திலிருந்து ஓர் ஆண்டுக்குள் சேகரிப்பதற்கான செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் மீதே பொறுப்பு சுமத்தப்பட்டது. எனினும், அதனாலும் ஏதும் நடந்ததுபோல் தெரியவில்லை.

மலைமலையாய் பிளாஸ்டிக் கழிவுகள் நகரவாசிகளின் பார்வைக்கு அப்பால் புறநகர்ப் பகுதிகளில் குவிந்துகொண்டிருக்கின்றன. உறுதியான நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆகும். 2017-ல் இந்தியாவில் நடந்த இணைய வணிகத்தின் மதிப்பு சுமார் ரூ.2.65 லட்சம் கோடி. இதுவே 2026 வாக்கில் சுமார் ரூ.13.75 லட்சம் கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத் துறையில் பொருட்களை பிளாஸ்டிக் உறைகளில் இட்டுத் தரும் செயல்முறை எந்த அளவுக்கு இடம்பிடித்திருக்கிறது என்பதையும் நுகர்வு அதிகரித்துக்கொண்டுவருவதையும் வைத்துக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மேலும் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இதில் பெரிய வாய்ப்பொன்று இருப்பதை வணிக நிறுவனங்களும், உள்ளாட்சி நிர்வாகங்களும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் காண வேண்டும். தீர்வுக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்துதல் இரண்டாவது, பிளாஸ்டிக் கழிவுகளைத் தரம்பிரித்து, சேகரித்து, எடுத்துச்செல்வதை அதிகரிப்பது. இந்த இரண்டிலும் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனைய பொருட்களுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக்கை உற்பத்திசெய்வதில் அதிக செலவாவதில்லை. எனினும், அவற்றை மறுசுழற்சி செய்து புதுப் பொருட்களாக மறுவடிவம் கொடுப்பது அவற்றின் ஆயுளை நீட்டிக்கும். கூடவே, புதிதாக பிளாஸ்டிக்கை உற்பத்திசெய்யும் அவசியத்தையும் அது குறைக்கும். இவ்வளவு இருந்தும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல் வழக்கமான பிளாஸ்டிக் மேலாண்மை செயல்முறைகளை, அவற்றையும் அரைகுறையாகவே, பின்பற்றுகின்றன. மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுப் பொருள் மற்றவற்றுடன் கலந்தால் பயனில்லாமல் போகும். இணைய விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைப் பொதிந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய்க் கொடுக்கும் லட்சக்கணக்கான பாலிதீன் பைகளையும் உறைகளையும் திரும்பப்பெறுவதில்லை. இந்தியாவில் வர்த்தகம் செய்வோர் பிளாஸ்டிக் கழிவு கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கலாம். குப்பை அகற்றுவதற்கென்று உரிய விதிமுறைகளுடனும் சாதனங்களுடனும் ஆட்களை நியமிக்கலாம். இப்படியெல்லாம் நடந்தால் நுகர்வோரும் விழிப்புணர்வு பெற்று பிளாஸ்டிக் மேலாண்மையில் கவனம் செலுத்துவார்கள்.

பிளாஸ்டிக் பொருட்களை நுகர்வதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது என்பதையும், தற்போதைய வேகத்தை வைத்துப் பார்க்கும்போது 2030-ல் இந்தியாவுக்குத் தேவைப்படும் பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்காக அதிகரிக்கும் என்று பொருளாதாரக் கணக்கீடு-2019 சொல்வது, குப்பையிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை மீட்டெடுப்பதற்கு இந்தியா முன்னுரிமை கொடுக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் இதில் நம்மைவிடப் பல படிகள் முன்னே உள்ளன. தங்கள் பொருட்களுடன் வரும் பிளாஸ்டிக்கை எப்படி மறுசுழற்சி செய்வது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் விவகாரத்தைக் கையாள்வதில் மிகவும் அலட்சியம் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று கழிவு மேலாண்மை. உள்ளாட்சித் தேர்தலை அரசியல் நோக்கங்களுக்காக முடக்கிவைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மை எவ்வளவு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கிஞ்சித்தும் அலட்டிக்கொள்வதில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிதீன் பைகளுக்குக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடும் தேர்தல் சூழலோடு நடைமுறையில் நீர்த்துப்போய்விட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதில் திடமான பார்வை ஒரு அரசுக்கு வேண்டும். ஏனென்றால், இது தலைமுறைகளை நாசமாக்கும் வல்லமை கொண்டது. பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் குவியலாக வளர்ந்து நம்மையெல்லாம் மூழ்கடிப்பதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x