

இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை குறைந்துவருகிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 9 நாள் இடைவெளிக்குள் 2 முறை கூறிவிட்டார். அவருடைய பேச்சு வழக்கம்போல சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனவரி 27-ம் தேதி இந்தியா விலிருந்து புறப்படுவதற்கு முன்னால் உரையாற்றும்போது, ‘மத அடிப்படையில் பிளவுபடும் நாடுகள் வளர்ச்சி பெற முடியாது’ என்று குறிப்பிட்டார். அமெரிக்கா சென்ற பிறகு, பிப்ரவரி 5-ம் தேதி பேசும்போது, ‘காந்திஜி இன்று உயிரோடு இருந்தால், இந்தியாவில் நிலவும் மதச் சகிப்பற்றதன்மை கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இது தர்மசங்கடமான நிலைதான். மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் தொடங்கி, நாட்டின் பல்வேறு துறைகளிலும் இந்துத்துவ அலைகள் புகுந்துகொண்டிருக்கின்றன. தவிர, ஒரு சில இடங்களில் மாற்று மதத்தினரின் வழிபாட்டிடங்கள் மீதான தாக்குதல்களும் தொடங்கி யிருக்கின்றன. தலைநகர் டெல்லியிலேயே இரு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்திய எதிர்க் கட்சிகள் அரசைச் சாடுவதற்கு, அமெரிக்க அதிபரின் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. விசுவ இந்து பரிஷத் போன்ற இந்துத்துவா அமைப்புகளோ ஒபாமாவின் பேச்சை இந்தியாவின் உள் விவகாரத்தில் செய்யப்படும் தலையீடு என்று கண்டித்துள்ளன.
அரசைப் பொறுத்த அளவில் மவுனத்தையே அஸ்திவாரமாக்கப் பார்க்கிறது. அமெரிக்க அதிபரின் வார்த்தைகளுக்கும் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கும் ஒருசேரப் பதில் அளிப்பதுபோல, “இந்தியாவின் பிரம்மாண்டமான கலாச்சார வரலாறும் மத சகிப்புத்தன்மையும் ஓரிரு சம்பவங்களால் கெட்டுவிடாது” என்று பேசியிருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “அமெரிக்க அதிபரின் பேச்சு வருந்தத் தக்கது” என்றும் “தேவாலயத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்றதில் தொடங்கி, அரசின் மீது தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போதெல்லாம் வாய்மூடியாகவே இருந்து எதிர்கொள்வதைப் போலவே இந்த விவகாரத்தையும் கடக்க நினைக்கிறார் போலும். வெளியுலகமும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் சமீபத்திய தலையங்கம் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
எந்தக் கூட்டத்தில் பேசினாலும், வளர்ச்சியும் முன்னேற்றமுமே தன்னுடைய அரசின் லட்சியம் என்று முழங்கும் மோடி, வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க சமூகத்தின் சுமுகச் சூழலே அடித்தளம் என்பதை உணர வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கரம் கோத்து ஒன்றாக நிற்கும்போதுதான், போட்டியாளர்களுக்கு முன் துணிச்சலாக நிற்க முடியும். இந்திய அரசியல் சட்டமானது மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் வகுத்தளித்திருக்கிறது. இந்த உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. அரசு நியாயமாக நடந்துகொள்வதை மக்கள் உணர வேண்டும் என்றால், மக்களின் பக்கம் பிரதமர் இருக்கிறார் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகன்(ள்) மத்தியிலும் இருக்க வேண்டும். ஒபாமாவுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை மோடி. ஆனால், மதச் சார்பின்மைக்குச் சவால் விடும் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராக நிச்சயம் வாய் திறக்க வேண்டும்!