

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் புர்காபால் பகுதியில் திங்கள்கிழமை அன்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இது. தோர்னாபால் ஜாகர்குந்தா பகுதியில் சாலைக் கட்டுமானப் பணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கச் சென்ற சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது இந்தக் கொடூரத் தாக்குதலை மாவோயிஸ்ட்டுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளது என்பதும் 2010 ஏப்ரலில், இதே பிராந்தியத்தில் உள்ள தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
புர்காபால் தாக்குதல் சம்பவம் பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் இன்னும் பலத்துடன் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அரசியல்ரீதியாக மாவோயிஸ்ட்டுகளை அணுகுவதில் அக்கறை செலுத்துவதுடன், காவல் படையினரின் உத்திகளிலும் மாற்றம் தேவை என்பதை இத்தாக்குதல் சுட்டிக் காட்டுகிறது. நிலையான இயக்க முறைமையையும், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளையும் சி.ஆர்.பி.எஃப். படை முறையாகப் பின்பற்றியதா எனும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
சாலை, பாலம் போன்ற தொடர்பு வசதிகளையும், அரசின் பங்களிப்புடன் உருவாகும் பள்ளிகள் போன்ற கட்டிடங் களையும் தகர்ப்பது மாவோயிஸ்ட்டுகள் நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் வழிமுறை. வளர்ச்சிப் பணிகள் தங்கள் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் இதையும் தாண்டித் தான் அரசு அங்கு முன்னேறவேண்டியிருக்கிறது.
பஸ்தாரில் அரசின் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்யும் வகையில் இனி பதில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்போதுதான், மாவோயிஸ்ட்டுகளால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் மக்களைத் தொடர்புகொள்வதுடன் அவர்களுக்கான சேவைகளையும் அரசால் வழங்க முடியும். மேலும், பாதுகாப்புப் படையினர், போலீஸாரின் மன உறுதிக்கு வலு சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். சமீபத்திய தாக்குதல் சம்பவங்கள் உளவுத் துறைப் பணிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை எடுத்துக்காட்டு வதுடன், மாநிலக் காவல் துறைக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் சுட்டிக்காட்டுகின்றன. சி.ஆர்.பி.எஃப். டைரக்டர் ஜெனரல் பதவி நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருப்பது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பைத் துணை ராணுவப் படைகள் வசம் விட்டுவிட்டு, போலீஸார் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலக் காவல் துறையினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது, விரிவாக்கம் செய்வது, பலப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் அரசுகள், உள்ளூர் மக்களைச் சென்றடைவதில் மேலும் முனைப்புக் காட்ட வேண்டும். தங்கள் வன்முறைப் பாதையால் மக்களின் நம்பிக்கையை மாவோயிஸ்ட்டுகள் எப்போதோ இழந்துவிட்டார்கள். இந்தச் சூழலில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதன் மூலமாகவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற முடியும்.