

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாகக் கர்நாடக விசாரணை நீதிமன்றம் 2014 செப்டம்பரில் அளித்த தீர்ப்பு செல்லத்தக்கது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இந்தத் தீர்ப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்; மற்ற மூவரும் விசாரணை நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தில் எஞ்சிய காலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும், ஒவ்வொருவரும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவருடைய இடத்துக்கு வந்ததுடன் புதிய முதல்வராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை நோக்கி சசிகலா சென்ற நிலையில் இத்தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு. ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களைப் புற்றீசல்போலச் சூழ்ந்து அவர்களைச் சீரழிக்கும் நிழல் அதிகார மையங்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும்!
1991-1996 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது வருவாய்க்குப் பொருந்தாத வகையில் ரூ.66.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் 2014-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவும் ஏனைய மூவரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்தார். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் அளித்தார். தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய தீர்ப்பு அது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறுபவர், அரசுப் பதவியில் நீடிக்க முடியாது என்பதால் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, குன்ஹாவின் முந்தைய தீர்ப்பை ரத்துசெய்தும், நால்வரையும் விடுவித்தும் தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து அரசுத் தரப்பு செய்த மேல் முறையீட்டில்தான் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் எதிரிகளுக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா பாராட்டப்பட வேண்டியவர். தனிப்பட்ட முறையில் எத்தனையோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும் தனது நிலையிலிருந்து பின் வாங்காமல் நீதிக்காகப் போராடியவர் அவர். நாட்டையே அதிரவைக்கும் ஒரு தீர்ப்பை முன்னதாக கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய நீதிபதி குன்ஹா இந்நேரத்தில் நினைவுகூரப்பட வேண்டியவராகிறார்.
ஆளும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு. வருவாய்க்குப் பொருந்தாமல் ஈட்டும் முறைகேடான பணத்தைச் செலுத்துவதற்காகவே முகமூடி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதை அதிமுகவினர் ஊன்றிப் படிக்க வேண்டும். இதுநாள் வரை “இது எதிர்க்கட்சிகளின் சதி” என்று சொல்லிக் கடந்ததைப் போல இனியும் இந்த வழக்கையும் தீர்ப்பையும் அவர்கள் கடக்க முடியாது. இது சசிகலா தலைமையில் இருப்பவர்களுக்கும் சரி; பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பவர்களுக்கும் சரி; இரண்டு தரப்பினருக்குமே பொருந்தும். அதிகாரப் போட்டியின் விளைவாக அதிமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி சண்டைகள் தமிழக மக்களைக் கொதிநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன. கட்சிக்குள் நடந்துவரும் அதிகாரச் சண்டைகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், தீர்ப்பைப் போகிறபோக்கில் கடந்தபடி, அடுத்தடுத்து அதிகாரப் போட்டிக்கான நகர்வுகளிலேயே அவர்கள் மும்முரமாகச் செயல்படுவது மிக ஆபத்தான போக்கு. மக்களிடத்திலிருந்து அவர்களை வெகுவாக அந்நியப்படுத்திவிடக் கூடிய போக்கு இது. அதிமுக ஊழலுக்கு எதிரான நீதிமன்றத்தின் பிரகடனத்துக்கு ஆக்கபூர்வமான ஒரு எதிர்வினையை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பிலிருந்து பாடம் கற்கவும் புதியதொரு சூழலுக்கு உருமாறவும் வேண்டும். ஏழரைக் கோடி மக்களின் பிரதிநிதியாக, ஒரு ஆளும்கட்சியாக இருக்கும் அதிமுக தார்மிகரீதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கடமை இது.
இந்த வழக்கில் ஏற்பட்ட தாமதம் மக்களுக்குக் கசப்பைத் தருவது, அது இந்திய நீதித் துறையின் பெரிய பலவீனம் என்றாலும், ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அவர்கள் உடனிருக்கும் நிழல் அதிகார மையங்களும் என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதியின் முன்னர் தண்டனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் இத்தீர்ப்பு விதைத்திருக்கிறது. அரசியல் தூய்மை எனும் பதம் வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் இனியேனும் நனவாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இத்தீர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்களுடைய மாற்றம் அதிமுகவிடமிருந்து தொடங்க வேண்டும்!