

தலைநகர் டெல்லியில் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் குறைக்கும் நோக்கத்துடன் மேக விதைப்பு முறையில் செயற்கை மழையை வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து டெல்லி அரசு மேற்கொண்ட இந்த முயற்சியில் ஏற்பட்ட தோல்வி பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.
அண்மையில், தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ட ஒரே நாளில் டெல்லியின் வானம் சாம்பல் நிறமாகவும், மேகமூட்டமாகவும் மாறியது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். இதனால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் என டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். பல ஆண்டுகளாக, டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்குப் பின்னர் விலக்கப்பட்டது.