

காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வில், துறையில் ஏற்கெனவே பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பதவி உயர்வு முன்னுரிமை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் மற்ற துறைகளில் உள்ள பதவிகளுக்கான தேர்வுகளில் இத்தகைய சலுகை இல்லாதபோது, காவல் துறையில் மட்டும் நிலவிவந்த இந்தப் பாரபட்சம் முடிவுக்கு வந்துள்ளதை வரவேற்கலாம். காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே காவலர் (கான்ஸ்டபிள்) பதவியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இருப்பவர்கள், 1994இல் தமிழக நிர்வாகத் தீர்ப்பாயத்தின் மூலம் இந்தத் தேர்வில் தங்களுக்கு 20% இடஒதுக்கீட்டைப் பெற்றனர். மீதமுள்ள 80% ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர், திருநர்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகிய பொதுப் பிரிவினர் வருகின்றனர்.