

தமிழ்நாட்டில் மது வணிகத்தை நடத்திவரும் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெறும் குற்றச்சாட்டுகளாக அல்லாமல், சட்டரீதியிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அமலாக்கத் துறை முன்வர வேண்டிய தருணம் இது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் மார்ச் 6 முதல் 3 நாள்களுக்குச் சோதனை நடத்தினர். ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
இந்த முறைகேடுகள் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் 2002ஆம் ஆண்டின் கறுப்புப் பணத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 முதல் 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது போன்ற முறைகேடுகள்; கொள்முதல் எண்ணிக்கை, பணியிட மாற்றம், பார் உரிமங்கள், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், பாட்டில் கொள்முதல், போக்குவரத்து போன்றவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை பட்டியலிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் வழக்கின் ஆரம்பக்கட்ட நிலையில்தான் எழுந்திருக்கின்றன. அடுத்தடுத்த விசாரணை நகர்வுகள் மூலமே இந்தக் குற்றச்சாட்டுகளில் உள்ள முகாந்திரங்கள் தெரியவரும். என்றாலும் டாஸ்மாக் முறைகேட்டில் இன்னும் அதிக அளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்றும் இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
டாஸ்மாக் மது வணிகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அமலாக்கத் துறையின் சோதனைகளைச் சட்டரீதியாகச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இதேபோல முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, டெல்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்ய பாஜக நினைப்பதாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால், இதுபோன்ற மறுப்புகள் சொல்வதாலேயே குற்றச்சாட்டுகள் பொய் என்றாகிவிடாது. ஓர் அரசு மீது முறைகேடு புகார் வரும்போது, அதில் சுயபரிசோதனை செய்துகொள்ள சம்பந்தப்பட்ட அரசும் முன்வர வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்குகளின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அதேவேளையில், எந்த ஆண்டு, யாருடைய ஆட்சிக்காலத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
சில்லறை விற்பனையில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பது, பார் உரிமங்கள் வழங்குவதில் முறைகேடு, டாஸ்மாக் கடைக்கு வெளியே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது என்று பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் புறந்தள்ள முடியாதவை. இதன்மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் நிச்சயம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத் துறை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. அந்தக் கறை போக்கப்பட வேண்டுமெனில், இது போன்ற வழக்குகளில் உண்மைத்தன்மையைச் சிரத்தையுடன் வெளிக்கொணர அமலாக்கத் துறை அக்கறை காட்ட வேண்டும். தொடர்புடையவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருவதிலும் முனைப்புக் காட்ட வேண்டும்.