உயிர்ப் பலிக் கூடங்களா பயிற்சி மையங்கள்?

உயிர்ப் பலிக் கூடங்களா பயிற்சி மையங்கள்?
Updated on
2 min read

நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள், 16 வயது நிரம்பிய அல்லது 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியக் கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உடல்-உள பாதிப்புகளுக்கு உள்ளாகித் தற்கொலை வரை செல்வது நாளுக்கு நாள் அதிகரித்துவருவதன் பின்னணியில், கல்வி அமைச்சகம் இத்தகைய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இன்றைய சூழலின் நெருக்கடியும் எதிர்காலம் பற்றிய அச்சமும் தங்கள் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளைப் பெற்றோரிடம் ஏற்படுத்திவிடுகின்றன. இதன் விளைவாக, கல்வி சார்ந்தும் பிற ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கும் குழந்தைகள் அவர்களின் இயல்புக்கும் ஆற்றலுக்கும் மீறி தற்போது ஈடுபடுத்தப்படுகின்றனர். முன்னெப்போதையும்விட இன்றைய குழந்தைகள் தங்கள் ஆற்றலுக்கு மீறிய சுமையைத் தாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பள்ளியில் தொடங்கும் இந்தச் சுமை உயர் கல்வியில் நுழைவதற்காகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் பருவத்தில் தீவிரமடைகிறது.

போட்டித் தேர்வு மையங்கள் எந்தளவுக்கு மாணவர்களின் வாழ்வைக் கலைத்துப் போட்டிருக்கின்றன என்பதற்கான உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம் விளங்குகிறது. பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்குப் பயிற்சி பெற, நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் இரண்டரை லட்சத்துக்கும் மேல் மாணவா்கள் இங்குள்ள பயிற்சி மையங்களில் சோ்ந்து பயின்று வருகின்றனா்.

ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது; தங்கும் விடுதிகள் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை வாடகை வசூலிக்கின்றன. போட்டித் தேர்வு மையங்களின் ஆண்டு வருமானம் ஏறக்குறைய ரூ.2,000 கோடி என மதிப்பிடப்படுகிறது; அவை ஆண்டுக்கு ரூ.130 கோடி வரை வரியாகச் செலுத்துகின்றன. இது மிகப் பெரிய வியாபாரமாக மாறியிருக்கிறது. இவ்வளவு இருந்தாலும், இங்கு பயிற்சி பெறும் மாணவர்களில் வெறும் 20-25% பேர் மட்டுமே போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்குச் செல்கின்றனர்.

இத்தகைய கடும் போட்டி நிலவும் சூழலில்தான் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் இன்ன பிற பாதிப்புகளுக்கும் உள்ளாகினர்; தற்கொலைகள் தொடர்கதையாகின. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், கோட்டா நகரத்தில் 2023இல் மட்டும் 26 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனா். 2024இல் இதுவரை 3 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான், கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து, ஒரு லட்ச ரூபாய் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை என வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வர உள்ளன. பயிற்சி மையங்களைச் சரிசெய்யக்கூடிய நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளலாம் எனக் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழிமுறைகள் எல்லாம் கறாராகப் பின்பற்றப்பட வேண்டும். கூடவே, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்கிறோம் என்ற பேரில் அவர்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றுவதைத் தவிர்க்கும் மனமுதிர்ச்சி பெற்றோருக்கும் ஏற்பட வேண்டும். கல்வி அமைப்பும் மாணவர்களைக் கைதூக்கிவிடும் வகையிலேயே இயங்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in