

தமிழ்நாட்டு உழவர் ஒருவரின் உருவத்தைச் சற்றுக் கற்பனை செய்துபாருங்கள். உங்கள் கற்பனையில் 40-50 வயதான, மண்வெட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு ஓர் ஆண்மகன் நிற்பார். இதே உருவகம் பல நேரம் நமது மத்திய - மாநில அரசுக் கொள்கைகளிலும் எதிரொலிக்கிறது.
பெரும்பாலான கொள்கைகள் இன்னமும் உழவர்களை ஆண் நில உரிமையாளர்களாக மட்டுமே கற்பனை செய்கின்றன. இந்தப் பாகுபாடு மாறி, பெண் உழவர்களின் உழைப்பும், பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், 2026ஆம் ஆண்டை ஐ.நா. மன்றம் ‘உலகப் பெண் உழவர் ஆண்டு’ என அறிவித்திருக்கிறது. இது மிகவும் முக்கியமான மாற்றம்!
கணக்கில் வராத பெண்கள்
அரசர்களையும் வணிகர்களையும் வரலாற்றுப் பதிவுகள் உரக்கப் பேசுகின்றன. ஆனால், காலங்காலமாக உணவை உற்பத்திசெய்தும் விதைகளைச் சேமித்தும் காலத்துக்கு ஏற்ப உணவு முறைகளை வடிவமைத்தும் மண்வளத்தைப் பராமரித்தும் போர், வறட்சி, இடம்பெயர்தல் போன்ற நெருக்கடியான காலங்களில் குடும்பத்துக்கு உணவளித்தும் வரலாற்றின் தொடர்ச்சியை உறுதிசெய்தவர்கள் பெண்களே! இன்றளவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பெரும்பாலும் பெண்களே வேளாண்மையின் முதுகெலும்பாக உள்ளனர்.
வீட்டிலும் நாட்டிலும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்கிறார்கள். எனினும், அவர்களது பங்களிப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. நில உரிமைகளும் பெயரளவிலேயே இருக்கின்றன. மேலும் கடன் வசதிகள், தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் பெரும் சிரமத்துக்குப் பின்னரே கிடைக்கின்றன. பல தலைமுறைகளாக, பெண்கள் ‘உழவர்கள்’ என்று பெயர் பெறாமலேயே நிலத்தில் உழவு செய்துவருகின்றனர்.
சம வாய்ப்பு அளித்தால்...
பெண்கள் விளைச்சலுக்காக மட்டும் சாகுபடி செய்வதில்லை. ஊட்டச்சத்து, நீடித்த எதிர்கால உணவுக்காக வேளாண்மை செய்கிறார்கள். அவர்களின் தேர்வுகள், எதை நட வேண்டும், எதைச் சேமிக்க வேண்டும், எப்படிக் குடும்பத்துக்கு உணவளிக்க வேண்டும் என்பதாக உள்ளது. அவர்கள் அது சார்ந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் பற்றிய புரிதலையும் பொறுப்புணர்வையும் கொண்டவர்களாகப் பெண்கள் இருக்கின்றனர். இந்த அறிவு திடீரென வந்துவிடவில்லை; இது பல நூற்றாண்டு அனுபவத்தால் வடிவமைக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட தகவமைப்பு கொண்ட நுண்ணறிவு. பல ஆய்வுகள் தொடர்ந்து ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன.
வேளாண்மையில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு நிலம், வளங்கள், அறிவு, சந்தை போன்ற வாய்ப்புகள் திறந்துவிடப்படும்போது, ‘உற்பத்தி உயர்வு’ தெளிவாகத் தெரிகிறது. பெண் உழவர்கள் ஏற்கெனவே நிலத்தில் மிகுதியாக உழைக்கிறார்கள்; கூடவே தரமான விதைகள், உரிய கருவிகள், பயிற்சி, கடன் வசதிகள் கிடைத்தால், அவர்களது உழைப்பின் பலன் இன்னும் முழுமையாக வெளிப்படும்.