

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் புதிய அரசுக்குப் பல்வேறு பொறுப்புகள், எதிர்காலத் திட்டங்கள் இருக்கும். அவற்றில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குப் புத்துணர்ச்சி அளிப்பது முக்கியமாக இருக்க வேண்டும் எனச் சமூக அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட மாநில அரசுகள், ஊரக வளர்ச்சி - உள்ளாட்சி நிர்வாகத் துறையின் கீழேயே நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சியையும் நகரமயமாக்கல் மேம்பாட்டையும் கையாண்டுவந்தன.
முதன்முறையாக 1984இல் நகரமயமாக்கலின் அதீத வளர்ச்சியின் காரணமாகவும், அதைத் தனித்துவமாகக் கையாள வேண்டிய தேவையின் நிமித்தமும், நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக என்றே ‘நகராட்சி நிர்வாகத் துறை’ (Municipal Administration and Water supply) என்கிற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
அதுவே தற்போதுவரை செயல்பட்டுவருகிறது. இடைப்பட்ட காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவற்றின் செயல்பாடுகள் - பொறுப்புகள் என்னென்ன என்பது குறித்து ஒரு தனிச் சட்டம் ஏற்படுத்தப்படவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ‘சென்னை மாநகராட்சிச் சட்டம் 1919’, ‘தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920’ ஆகியவையே தொடர்ந்து நீடித்தன. அதன் பிறகு, நகரமயமாக்கலின் தாக்கத்தால் நகரங்கள் பெருகியபோது, ‘மதுரை மாநகராட்சிச் சட்டம் 1971’, ‘கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம் 1981’ ஆகியவை நடைமுறைக்கு வந்தன.
அதைத் தொடர்ந்து திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளுக்கான தனித்தனிச் சட்டங்களும் இயற்றப்பட்டன. நகரமயமாக்கலைப் பொறுத்தவரையில் ஓர் அரசின் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான வரைவோ, வழிகாட்டுதலோ அரசிடம் இருக்கவில்லை.
இதனால் நகர்ப்புற வளர்ச்சிக்கான வெற்றிடம் நிலவி வந்தது. உண்மையான அதிகாரப் பரவல் சாத்தியமாகவில்லை. மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடித்தது.
சரிந்த நம்பிக்கை
இத்தகைய சூழ்நிலையில்தான், இந்திய அரசமைப்பில் 74ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, 1993இல் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அரசமைப்பு ரீதியிலான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, 12ஆவது அட்டவணையின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 18 வகை பணிகளும் செயல்பாடுகளும் எவையென்று துல்லியமாக வரையறுக்கப்பட்டன.